சிங்கம், பாகுபலி, அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி என தமிழ், தெலுங்கில் இதுவரை 47 படங்கள் நடித்துவிட்டார் அனுஷ்கா. இதில் பல படங்களில் ராணியாக கம்பீரமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆக்ரோஷமான அவரது நடிப்பும், ஆஜானபாகு தோற்றத்தில் மிரட்டும் குரலில் பேசும் வசனங்களும் பாத்திரங்களுக்கு வலு சேர்த்தன. ஆனால் படத்தில் அவரது கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசியதில்லையாம்.
‘உங்கள் குரல் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா, சொந்த குரலில் டப்பிங் பேசாதது ஏன்?’ என்று அனுஷ்காவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில்: எனது கதாபாத்திரங்களுக்கு நானே சொந்த குரலில் டப்பிங் பேச வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் எனது உயரமான தோற்றத்துக்கும் என் குரலுக்கும் சம்பந்தம் இருக்காது. சின்னபெண் பேசுவதுபோன்றுதான் எனது குரல் சன்னமாக இருக்கும்.
வீட்டில் இருப்பவர்களிடம் பேசினாலே சின்ன குழந்தைபோல் பேசுகிறாயே என்று தமாஷ் செய்வார்கள். நான் ஏற்கும் கதாபாத்திரங்கள் வலுவானது. அந்த வேடங்களுக்கு எனது குரலில் பேசினால் அது ஒத்துப்போகாது. கதாபாத்திரத்தின் வேகத்துக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லாமலிருக்கும். அதனால்தான் நான் டப்பிங் பேச வேண்டும் என்று இயக்குனர்களிடம் வற்புறுத்தியது கிடையாது.