இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

மத்திய மற்றும் தெற்கு இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, இத்தாலியின் நோர்க்கியா அருகே 6.6. ரிக்டர் அளவிலேயே உணரப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.

இந்நிலையில் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரோம் நகரில் இருந்து வடகிழக்காக 132 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.

நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கி உள்ளன, இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இதற்கிடையே இத்தாலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவுக்கொண்டது என்று ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

இத்தாலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 298 பேர் பலியாகினர் என்பது நினைவு கூறத்தக்கது.