டீசல் மற்றும் பெற்றோல்களினது விலைகளில் உயர்வு

இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருளுக்கான விலைகளை உயர்த்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஒயில் நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல்ஆகியவற்றின் விலைகளை லீற்றர் ஒன்றுக்கு இரண்டு ரூபாவினால் உயர்த்தியுள்ளது.

உடன்படிக்கைகளை மீறி நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுயாதீன தொழிலாளர் ஒன்றியத்தின் உப தலைவர் ஜீவக ருவான் ருபசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சிபட்கோ நிறுவனம் விலைகளை உயர்த்தாத நிலையில் இந்தியன் ஒயில் நிறுவனம் மட்டும் விலைகளை உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்விற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை  திருகோணமலை சீனன்குடாவில் காணப்படும் பெறுமதி வாய்ந்த எண்ணெய்த் தாங்கிகளை அரசாங்கம் இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதேச்சாதிகாரமாக இவ்வாறு எரிபொருள் விலையை இந்தியன் ஒயில் நிறுவனம் அதிகரித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தை இரகசியமாக தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளன.