இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. தொடக்க விழாவில் இந்திய நடிகை ஐஸ்வர்யாராய் நடனமாடுகிறார்.
8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழா நாளை (3-ந் திகதி) முதல் டிசம்பர் 20ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் இந்தி நடிகைகள் ஐஸ்வர்யாராய், அலியா பாத் ஆகியோரின் கண்கவர் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
இகுறித்த விழாவில் ஐ.எஸ்.எல். சேர்மன் நீட்டா அம்பானி, இந்தி நட்சத்திரம் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், சென்னையின் எப்.சி. அணியின் இணை உரிமையாளரும், இந்தி நடிகருமான அபிஷேக்பச்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
தொடக்க விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் அதே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் நிலவுவதால் டிக்கெட் கிடைப்பது அரிதாகி இருக்கிறது. சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று விற்று தீர்ந்து விட்டது. சுமார் 35 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக ஐ.எஸ்.எல். நிர்வாக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(riz)