இந்தியாவின் புதுமுக வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தனது துல்லியத்தன்மை கொண்ட பந்துவீச்சால் அவுஸ்திரேலியாவை பொறி கலங்க செய்கிறார்.
குஜராத்தை சேர்ந்த பும்ராவுக்கு தற்போது 22 வயது தான் ஆகிறது. அதற்குள் பல வித்தைகளை கற்று எதிரணியை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.
ஒருநாள் தொடரில் இந்தியா தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்விய தழுவிய நிலையில், கடைசிப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய பும்ரா தொடக்க போட்டியே அசத்தினார்.
அனுபவசாலி பந்துவீச்சாளர்களே ஓட்டங்களை அள்ளி வழங்கிய நிலையில், அந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 40 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேபோல் முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை திணறடித்த பும்ரா, 4 ஓவர்கள் வீசி (21 பந்துகள்) 23 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிகட்ட ஓவர்களிலும் அவரது பந்து வீச்சு அபாரமாக இருந்தது.
சர்வதேச கிரிக்கெட்டுக்கு பும்ரா புதிய வீரராக இருந்தாலும், தனது பந்துவீச்சை ஐபிஎல் போட்டி மூலம் மெருகேற்றிக் கொண்டார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, ஆடும் இவருக்கு, சக வீரர்களான லசித் மலிங்கா, ஜாகீர் கான் ஆகியோர் மிகவும் நெருக்கம்.
இவரிடம் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மலிங்காவின் ஸ்டைல் காணப்படுகிறது. பும்ராவின் பக்கவாட்டு கை ஆக்ஷன், துடுப்பாட்ட வீரர்களை குழப்புவதும் அவரது ஆதிக்கத்துக்கு காரணமாக உள்ளது.
இறுதி கட்ட ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்களை திணறச் செய்யும் ஆயுதங்களில் முக்கியமானது யார்க்கர். அத்தகைய யார்க்கர்களை வீசுவதில் மலிங்கா கைதேர்ந்தவர்.
அதேபோல் துடுப்பாட்ட வீரர்களின் கால் அல்லது பேட் விளிம்பிற்கு கீழே ’பிளாக்-ஹோல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் துல்லியமாக பந்துவீசும் போது எளிதாக விக்கெட்டுகளை எடுத்துவிடலாம்.
இத்தகைய பந்தை சரியாக வீசுவதில் உலக அளவில் வாசிம் அக்ரம், மெக்ராத், ஜாகீர் கான், மலிங்கா சிறந்தவர்ககள். அதே போன்றுதான் அச்சுறுத்தும் யார்க்கர்களை வீசுகிறார் பும்ரா.
அவர் முதல்தரப் போட்டியில் கூட விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். 18 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள பும்ரா, 64 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதிலும் சிக்கனத்தன்மை வெறும், 2.72 மட்டுமே என்பது வியக்கத்தக்கது.
அவர் களமிறங்கிய 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியை ருசித்துள்ளது. இதனால் அவரது வருகையை இந்திய வீரர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.