இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 02 பந்திற்கு 02 லட்சம் டாலர் – உமர் அக்மலுக்கு அழைப்பு…

தற்போது உடற்தகுதி பிரச்சினையால் அணியில் இடம்பிடிக்காதுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது 02 பந்தை லீவ் செய்வதற்கு 02 லட்சம் டாலர் பணம் தருவதாக தன்னை அணுகிறார்கள் என்ற வெடிகுண்டை தூக்கிப் போட்டார்.

மேலும், இது குறித்து அக்மல் கூறுகையில்;

‘‘இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு போட்டியில் சூதாட்டக்காரர்கள் என்னை அணுகிறார்கள். பெரும்பாலும் ஐசிசி தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரின் போது இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ‘B’ பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதில் இந்தியா 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறித்த இந்த போட்டியில் உமர் அக்மல் 04 பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். இந்த தொடரின் போதுதான் தன்னை அணுகிறார்கள்.

ஆனால், நான் அவர்களிடம், நான் மிகவும் கண்டிப்பானவன், பாகிஸ்தானுக்காக விளையாடும் போது, இது குறித்து என்னிடம் மீண்டும் பேசக்கூடாது என்றேன்’’ என்று கூறியுள்ளார்.

இவரது பேட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதோடு, இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உமர் அக்மலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.