ஓமான் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று(12) இருநாடுகளுக்கு இடையில் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
5 நாட்கள் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(12) ஓமான் நாட்டின் தலைநகரான மஸ்கட் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஓமான் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். வர்த்தகம், முதலீடு, இராணுவம், பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமான் நாட்டில் பணியாற்றும் இந்தியர்களின் உழைப்பையும், நேர்மையையும் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் வெகுவாக பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, வெளியுறவு, விசா பரிவர்த்தனைகள், சுகாதாரம், சுற்றுலா, விண்வெளித்துறை போன்ற 8 முக்கிய ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.