இந்தியாவில் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து அங்கு 26% ஆன முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை 02% இற்கு குறைவாக மாற்றியமைத்தது போல இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைப்பதற்கான திட்டமிட்ட சதி இடம் பெறுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
கண்டியில் நேற்று(18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“..கடந்த அரசினை வீழ்த்தி எங்களுடன் ஒரே அமைச்சரவையிலிருந்த மைத்திரியையும் ரணிலையும் ஆட்சிக்குக் கொண்டு வந்ததன் பிரதிபலன்களை இன்று படிப்படியாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எந்தவொரு காலத்திலும் சேர்ந்து கொள்ள முடியாத இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளை ஒரே தளத்துக்கு கொண்டு வந்து ஆட்சியமைக்க வழியமைத்த நமது முஸ்லிம் சமூகத்தை செல்லாக் காசாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வந்து நமது சமூகத்தை கருவறுக்கும் முயற்சிகள் இடம்பெறும் அதேவேளை புதிய அரிசியலமைப்பை அவசர அவசரமாகக் கொண்டு வந்து இன்னுமொரு சமூகத்தை திருப்திப்படுத்துவதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்..” எனவும் தெரிவித்திருந்தார்.