இந்திய தேர்தல் நடைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் செயல்பட்டால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேஸ்புக் நிறுவனத்தினை எச்சரித்துள்ளார்.
Cambridge Analytica என்ற நிறுவனம், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது, facebook நிறுவனத்திடம் இருந்து வாக்காளர்கள் பற்றிய தகவல்களைத் பெற்று, ட்ரம்ப் வெற்றி பெற உதவியதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில், facebook ஐ நீக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக வாட்ஸ் ஆப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற கருத்துகளால் facebook மீதான சந்தேகம் சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் ஊடகவியலளார்களிடம் கருத்துத் தெரிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்;
“.. அமெரிக்காவில் நடந்ததைப் போல், இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த நேரடியாகவோ மறைமுகமாகவே முயன்றால் கடுமையான நவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவது தெரிந்தால் facebook நிறுவனர் Mark Zuckerberg ஐ இந்தியா வரவழைத்து விசாரணை நடத்த சட்டத்தில் இடம் இருக்கின்றது…” என அவர் கூறியுள்ளார்.
மேலும் 2019 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து Cambridge Analytica நிறுவனத்துடன் காங்கிரஸ் பேசி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தகவல்களைச் சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளையும் ரவிசங்கர் பிரசாத் எழுப்பி உள்ளார்.
fb மூலமாக தகவல் திருட்டைப் பயன்படுத்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் உள்ளதா என்று ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார்.
Cambridge Analytica நிறுவனத்தின் மூலம், fb நிறுவனத்திடம் இருந்து வாக்காளர்களின் தகவல்களைத் பெற்று, அதன் மூலம் ஆதரவாளர்களை அதிகரிப்பதுதான், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள பிரம்மாஸ்திரமா என்றும் ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார்.
பாலியல் தொழிலாளர்களைக் காட்டியும், லஞ்சம் கொடுத்தும், தவறான செய்திகளைப் பரப்பியும் அரசியல் வாதிகளின் வெற்றிக்கு உதவலாம் என Cambridge Analytica நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான Alexander Nix, தமது ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அண்மையில் அம்பலமான தகவல்களையும் ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டினார்.
ஆனால், பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே ஆளும் பாஜக அரசு, இத்தகைய புகார்களைக் கூறுவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவ்ய ஸ்பந்தனா உள்ளிட்ட பலரும் பதிலளித்துள்ளனர்.