மலையகத்தில் கற்பிக்க இந்திய ஆசிரியர்களுக்கு அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருதானை சன சமூக நிலையத்தில் நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்;
“..நல்லாட்சி அரசாங்கம் மலையக மாணவர்களின் கல்வி தொடர்பில் இதுவரையில் எவ்வித கரிசனையும் காட்டவில்லை. இந்நிலையில் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றும் செயற்பாட்டை ஆசிரியர் நியமனத்திலும் மேற்கொள்ள வேண்டாம்.
நாட்டில் அதிகம் பொருளாதார சுமையில் வாழும் மலையக மக்களின் கல்வியில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கமும் பாரபட்சமே காட்டி வந்தனர். அவர்களை காலம் காலமாக தோட்டத்திலேயே அடைத்து வைத்தே அரசும் மலையக கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன.
மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை நோக்கும் போது பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்குவது மிக குறைவாகவே காணப்படுகின்றது. பொருளாதார பிரச்சிணை உயர்கல்வி வாய்ப்பு இன்மை என்பன பிரதான பிரச்சினையாகும். இவர்களில் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே உருவாகின்றனர்.
புதிதாக ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு நாட்டின் இரு பிரதான கட்சிகள் இணைந்து பங்காளிகளாகவே ஆட்சி புரிகின்றன. குறித்த ஆட்சியில் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் இராதாகிருஷ்ணன்; மலையக பகுதிகளுக்கு உயர்தரத்தில் விஞ்ஞான கணித பிரிவைக் கொண்ட 25 பாடசாலைகளை உருவாக்கி தருவேன் என்று கூறி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்து கற்றலுக்கு தேவையான மனித வளத்தை பெற்றுத் தரவில்லை. இந்நிலைமை இவ்வாறு இருக்கையில் கணித விஞ்ஞான பிரிவுகளை இப்பாடசாலையில் ஆரம்பிப்பது இயலாத காரணமாக உள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலை பெற்றுத் தருமாறு தற்போது போராட்டங்களை மேற்கொண்டு வரும் தருணத்தில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து மலையக பகுதிகளில் கல்வியை போதிக்க எடுக்கும் நடவடிக்கையானது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. இவ்வாறான செயற்பாடு மேலும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மேற்கொள்ள இருக்கும் எட்கா ஒப்பந்தத்தில் முன்னோட்டமாக இதை பார்க்கலாம். எனவே இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாது இவ் அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது..” என மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.