இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கை சுற்றுப் பயணத்துக்கான போட்டி அட்டவணையை ஒளிபரப்பு நிறுவனமான சோனி சிக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியா– இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12–ம் திகதி காலியில் தொடங்குகிறது.
2–வது டெஸ்ட் போட்டி 20–24–ம் திகதி கொழும்பிலும், 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 28– செப்டம்பர் 1–ம் திகதி வரை பல்லேகலவிலும் நடக்கிறது.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப் போட்டி அட்டவணையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்தியா– இலங்கை டெஸ்ட் தொடரை ஒளிபரப்பு உரிமத்தை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் அந்த நிறுவனம் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இலங்கை பயணத்தை முடித்து வந்த பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுடன் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20– ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத், டெல்லி, நாக்பூர், பெங்களூர் ஆகிய இடங்களிலும், ஒருநாள் போட்டிகள் சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட், மும்பை ஆகிய இடங்களிலும், 20 ஓவர் போட்டிகள் கொல்கத்தா, மொகாலி, தர்மசாலா ஆகிய இடங்களிலும் நடக்கிறது.
2–வது கட்ட இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ளது. அந்த அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 10–ந்தேதி தொடர் தொடங்குகிறது. 19–ந்தேதி வரை இந்திய அணி ஜிம்பாப்வேயில் விளையாட உள்ளது.
(riz)