இந்திய – மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரிய பிரச்சினைக்கு தீர்வு

2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு விளையாட வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியினர், அந்த நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட சம்பள பிரச்சினை காரணமாக சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முறித்து கொண்டு நாடு திரும்பினார்கள். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே மோதல் உருவானது.

பாதியில் தொடரை விட்டு சென்றதால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.275 கோடியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சட்டரீதியாக நோட்டீசு அனுப்பியது. நீண்ட காலமாக நீடித்த இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இப்போது சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது.

இதன்படி இழப்பீட்டு தொகை நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங் மனோகரும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் டேவ் கேமரூனும் உறுதி செய்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு (2017) இந்தியா வந்து பாதியில் விட்டு சென்ற தொடரில் எஞ்சிய ஒரு ஒருநாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடும். மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சென்று 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளது.