இந்திய ஹாக்கியின் வெற்றியை தக்கவைக்குமா – இன்று பாகிஸ்தானுடன் மோதல்

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இன்று பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில், உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி சுற்று நடக்கிறது. ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இந்திய அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், போலந்து, பிரான்ஸ் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

முதலிரண்டு லீக் போட்டியில் பிரான்ஸ், போலந்து அணிகளை வீழ்த்திய இந்திய அணி, இன்று நடக்கும் 3வது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. போலந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வி அடைந்தது.

முதலிரண்டு போட்டியில் கோல் அடித்து கைகொடுத்த மன்பிரீத் சிங், தேவிந்தர் வால்மிகி, ராமன்தீப் சிங், யுவராஜ் வால்மிகி, கேப்டன் சர்தார் சிங் இன்றும் சாதிக்கலாம்.

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியா, அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட முதல் அணியாக தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற உலக ஹாக்கி லீக் தொடர் கடைசி வாய்ப்பாக உள்ளது.

சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 160 போட்டியில் மோதின. இதில் இந்தியா 52, பாகிஸ்தான் 80 போட்டியில் வென்றன. மீதமுள்ள 28 போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன. கடைசியாக இவ்விரு அணிகள் புவனேஸ்வரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் மோதின. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.