(FASTNEWS|COLOMBO)- இந்தோனேசியாவில் ஜனாதிபதி விடோடோவின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஜோகோ விடோடோவின் வெற்றியை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், கண்டன பேரணிகள் நடைபெற்றன. வாகனங்களுக்கு தீவைத்தும், எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பதற்றம் உருவானது.
இந்த வன்முறையின்போது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியானது. வன்முறை தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.