இந்தோனேசியா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு…

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சமீபத்தில் 7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது எனவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.