இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு…

இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தில் மாத்திரம் 183,046 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 427 பேர் உயிரிழந்துள்ளதாக டொக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்,

மேல் மாகாணத்திலேயே டெங்கு காய்ச்சலால் அதிகளவிலான மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு 55,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன் அவர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சுற்றுப்புறச் சூழலை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.