இனரீதியில் வன்முறைகளை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றவே சிலர் முயற்சி – ஜனாதிபதி…

நாட்டில் இனரீதியில் வன்முறைகளை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றவே சிலர் முயற்சிக்கிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(19) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூட திறப்பு விழா நிகழ்வின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன;

“…அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்த பிரதமர் யார்? என்ற போட்டியுடன் இன ரீதியில் பிரச்சினையை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றவே சிலர் முயற்சிக்கின்றனர். நாட்டின் மீது அக்கறை கொண்ட தலைவர்கள் உண்மையில் இருக்கின்றார்களா என்று சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்த பிரதமர் யார்? என்ற போட்டியுடன் சிலர் செயற்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு நாட்டின் மீது அக்கறையில்லை மாறாக ஆட்சியை கைப்பற்றுவதற்கு இனரீதியான பிரச்சினைகளை தோற்றுவிப்பதே அவர்களது இலக்கு. இதில் மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள் அவ்வாறானவர்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் காணாமல் போனோர் விடயத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களின் உறவுகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அது தனது கடமைகளை முன்னெடுத்துள்ளது. அதனால் காணாமற்போனோரின் உறவினர்களின் கோரிக்கைகள் பற்றி நான் அதிகம் பேசத் தேவையில்லை..” என தெரிவித்திருந்தார்.