இனவாதத்தை தூண்டும் அரசியலை மக்கள் இனங்காண வேண்டும் – ரிஷாத்

இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை மக்கள் கொண்டு வருவதற்கு பிரதான காரணியாக இனவாதிகளின் ஆட்சி இருந்தது, அப்போதைய அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டினோம்.

ஆனால் அது எவ்வித பலனுமளிக்கவில்லை .ஆகவே தான் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற நேரிட்டதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன்; இன்று மீண்டும் இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பொதுசன முன்னணியில் போட்டியிடுவதாகவும்,அவரது ஏஜெண்டுகளாக வன்னியில் சில முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வவுனியா சாளம்பைக்குளம்,மற்றும் தலைமன்னார் பியர் கிராமங்களில்  வியாழக்கிழமை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத் தலைமையில் இடம் பெற்ற இச்சந்திப்பில் மேலும் கருத்துரைக்கையில்;

இந்த பாராளுமன்றத் தேர்தலை நாம் இலகுவாக நோக்கிவிட முடியாது,மஹிந்தவின் பண பலத்துடன் இணைந்திருக்கின்றவர்களும்,இனவாத அரசியல் பேசும் கட்சிகளும், குழுக்களும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கும் பிரசாரமாகும்,வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளை சிலர் இரண்டாக மட்டும் பிரித்துள்ளனர்.

ஒன்று றிசாத் அணி மற்றது றிசாதுக்கு எதிரான அணி என,எனக்கு எதிரான அணியில் இருப்பவர்கள்,அன்று பொதுபலசேனாவை உருவாக்கி முஸ்லிம்,தமிழ் மக்களுக்கு அநியாயங்களை செய்தவர்கள்.

அவர்களுடன் கைகோர்த்து முஸ்லிம்களை மேலும் துன்புறுத்தும் கைங்கரியத்திற்கு உதவியாக மன்னாரை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும்,அதே போல் வருமானத்தை மட்டும் நோக்காக கொண்ட முஸ்லிம் வியாபாரி ஒருவரும்  காணப்படுகின்றனர்.

இவர்கள் அன்று முஸ்லிம்களையும்,முஸ்லிம் பெண்களையும்,முஸ்லிம் வர்த்தகர்களையும் அழிப்பதற்கு ஆதரவாக இருந்தவர்களின் கொன்தராத்து வேளையினை பொறுப்பெடுத்துள்ளனர்.

இவர்களது நோக்கம் எனது மக்களின் அரசியல் பயணத்திற்கு தடையேற்படுத்தி இந்த மக்களை அடிமைகளாக கைக்கட்டி  அவர்களிடம் சென்று கையேந்தும் நிலையினை உருவாக்க முயற்சிப்பவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.இவர்கள் தொடர்பில் மக்கள் ஏமாந்து விட வேண்டாம்,

என்னை பொறுத்த வரை இந்த சக்திகளுக்கு நாம் அஞ்சுபவர்கள் அல்ல,மக்களின் துாய்மையான வாக்குப்பலமும்,துணிவும் இருக்கின்றது.

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையினால் தான் கடந்த பல வருடங்களாக இந்த மக்களுக்கு பணியாற்ற முடிந்தது.மக்கள் பெற்றுக் கொள்ளும் அபிவிருத்திகள் மற்றும் வளர்ச்சிகளை தாங்கிக் கொள்ள முடியாத இந்த நபர்கள் முஸ்லிம்களை யார் அழிக்க துடித்தார்களோ அவர்களின் வாகனத்தில் ஏறிக் கொண்டு பயணம் செய்கின்றனர்.

சந்தரப்பவாத அரசியல்களால் ஒரு போதும் மக்களுக்கு நன்மையாற்ற  முடியாது.அற்ப சொற்ப லாபங்களுக்காக ஒரு சமூகத்தினை அடகு வைப்பதுடன்,அவர்களை கொத்தடிகளாக மாற்றி,கோழைச் சமூகமாக வைப்பதன் மூலம் அவர்களது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள முடியும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும், இந்நாட்டில் உள்ள 20 இலட்சம் முஸ்லிம்களும் இன்று அச்சமற்ற சூழலில் வாழும் நிலையினை காணுகின்றோம்,அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தேவைாயன அடித்தளத்தினை  இடுகின்ற ஒரு தேர்தலாக இந்த பொதுத் தேர்தல் அமையவுள்ளது.

இதனை நாங்கள் சரிவர  பயன்படுத்தாமல் போவோமெனில் எதிர்வருகின்ற 5 வருடங்கள் எம்மால் எதிர்பார்க்கும் அபிவிருத்தியின் இலக்கினை அடைந்து கொள்ள முடியாது.

வடபுலத்து மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர்.அவர்களுக்கு நாம் பணியாற்ற முற்படுகின்ற போது அதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றனர்.இதனை மீறி செய்வதற்கு நாம் முனைகின்ற போது அதற்கு இனவாத சாயத்தை பூசுகின்றனர்.

அதே போல் இனங்களுக்குள் பிளவுகளை மேற் கொள்கின்றனர்.இந்திய வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம்களுக்கே அதிகமான வீடுகள் வழங்கப்படுவதாக பிரசாரங்களை செய்கின்றனர்.

இவர்கள் யாரெனில் கடந்த காலங்களில் மக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டியவர்கள், சந்தரப்பவாத அரசியலை செய்கின்றவர்கள்,இன்று மீண்டும் மக்களை காட்டிக்கொடுக்கும் அணியில் களமிறங்கியுள்ளவர்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

 

(riz)