இனவாதத்தைப் பெயரில் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையகத்துக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர்நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை நிராகரித்தது.
மனுவை சமர்ப்பிக்கும் காலம் நிறைவடைந்து விட்டதையடுத்தே, குறித்த இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர, கே.டீ.சித்திரசிறி மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோரைக் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மனு, நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணையாளர், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், திராவிட ஐக்கிய விடுதலை முன்னணி, நவ சிஹல உறுமய, முஸ்லிம் தேசியக் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 20-இன் பொதுச்செயலாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் தேர்தல்கள் செயலக அதிகாரிகளும்; பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.