(FASTNEWS|COLOMBO) – சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்த வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையை கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல் நேரலையாக யூடியூபில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.