தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படங்களில் இனி குடி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறாது என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இன்றைய திரைப் படங்களில் நண்பர்கள் குடிக்கும் காட்சிகள், கலாட்டா செய்யும் காட்சிகள் இடம் பெறுவது சாதாரணம். என்றாலும், இந்த படங்களுக்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற படங்களை பார்க்கும் இளைஞர்கள் குடிப்பது தவறு என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டார்கள். ‘தண்ணி அடிப்பது ஜாலி’ என்ற மனநிலைக்கு மாறி ‘டாஸ்மாக்’கில் மாணவர்களும் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இளம் பெண்களும் ‘பார்’ சென்று ‘சரக்கு’ போடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
இளம் இயக்குனர்களும் இது படம் தானே என்று மதுகுடிக்கும் காட்சிகளை படத்தில் வைப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. என்றாலும், ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் சமீபகாலமாக தங்கள் படங்களில் இதுபோன்ற காட்சிகள் வேண்டாம் என்று தவிர்த்து விடுகிறார்கள்.
இப்போது, சிவகார்த்திகேயனும் தான் நடிக்கும் படங்களில் மது குடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என்று சொல்லி இருக்கிறார். இதுபற்றி கூறியுள்ள அவர்…
“முன்பு ‘டாஸ்மாக்‘ காட்சிகளில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்தேன். ஆனால், இப்போது தான் அதன் கொடிய தாக்கம் எனக்கு புரிகிறது. போதும்… இனி என் படங்களில் இந்த மாதிரி எந்த காட்சியும் இருக்காது. என் இயக்குனர்களும் இனி இதுபோன்ற காட்சிகளை எனக்கு மட்டும் அல்ல, வேறு படங்களுக்கும் வைக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.