இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருவது தொடர்பான நிலைமைளை விளக்கும் வகையில் கொழும்பு- தொற்றுநோய் தடுப்பு பிரிவில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்புளுவென்ஸா வைரஸ் காய்ச்சல் இலங்கையில் வேகமாக பரவி வருவதாகவும் அது பறவை காய்ச்சல் அல்ல என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை 143பேர் இத்தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவ்வருடத்துக்குள் இவ்வைரஸ் தொற்றினால் 7 பேர் பலியாகியுள்ளனர்
தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது. சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
தேவையான அனைத்து உபகரணங்களும் மருத்திவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனைக்காக ஆய்வு நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்குகின்றன.
2 வயதுக்கு குறைந்த குழந்தைகள்- கர்ப்பிணி தாய்மார்- முதியோர்- பரம்பரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவதானத்துடன் இருப்பது அவசியம் எனவும் நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும் என்றும் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தினார்.