நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நாளை(31) வரை காற்றுடன் கூடிய நிலைமை தொடர்ந்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மேலும், மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீனவர்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன்,மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.