இன்றும் நாளையும் மழையுடன் கூடிய காலநிலை…

(FASTNEWS-COLOMBO) இன்றும்(26) நாளையும்(27) நாட்டின் தென்மேற்கு பகுதியில் குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்ற வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் கேகாலை, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.