இன்று கொழும்பில் முன்னெடுக்கவுள்ள மே தின பேரணிகள்…

மே முதலாம் திகதி இடம்பெற்று வரும் பேரணிகள், கூட்டங்கள் இம்முறை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முடிவின் அடிப்படையில் மே 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட போதும், இன்று(01) முதலாம் திகதி தலை நகர் கொழும்பில் மட்டும் 4 மே தின பேரணிகளும் 8 மே தின கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி கொள்கைகளை உடைய அரசியல் கட்சிகள் சிலவும், 25 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் இந்த பேரணிகள் மற்றும் கூட்டங்களை தனியாகவும் ஒன்றிணைந்தும் ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, வழமையாக மே தினத்தன்று இடம்பெறும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, முன்னாள் தொழில் அமைச்சர் சி.வி. இலங்கரத்ன மற்றும் முன்னாள் தொழில் சங்கத் தலைவரான ஏ.ஈ. குணசிங்க ஆகியோரை நினைவு கூரும் நினைவஞ்சலி நிகழ்வுகளும் வாழைத்தோட்டம், கங்காராம மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் அவரவரின் நினைவுத் தூபிகளுக்கு முன்பாக இடம்பெறவுள்ளன.

22 தொழிற் சங்கங்கள் இணைந்து பேரணி ஒன்றினை நடாத்த ஏற்பாடுச் செய்துள்ளன. இலங்கை வங்கிச் சங்கம், கட்டுநாயக்க சுதந்திர சதுக்க தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை உள்டக்கிய இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொதுத் தொழிலாளர் சங்கம் ( சி.எம்.யூ) இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேரணியானது முற்பகல் 9.30 மணிக்கு கொள்ளுபிட்டி, பாலா ட்ரேன்போ எவனியூவ் பகுதியில் ஆரம்பித்து காலி முகத்திடல் வீதியூடாக கோட்டை ரயில் நிலையம் வரை செல்லவுள்ளது. கோட்டை ரயில் நிலையம் முன்பாக குறித்த தொழிற்சங்கங்களின் பிரதான கூட்டம் நடாத்தப்படவுள்ளன.

அத்துடன் ஐக்கிய சோஷலிஷ கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தின பேரணி பிற்பகல் 1.00 மணிக்கு ஒருகொடவத்த மேம்பாலம் அருகில் இருந்து கிராண்ட்பாஸ் – பலா மரச் சந்தி வரையில் பயணிக்கவுள்ளது. அங்கு அவர்களின் மே தினக் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னிலை சோஷலிஷக் கட்சியின் மே தின பேரணி பிற்பகல் 1.00 மணிக்கு மருதானை – எல்பிஸ்டன் மண்டபம் அருகில் இருந்து ஆரம்பித்து தொழில்நுட்ப சந்தி ஊடாக புறக்கோட்டை போதி வரையில் அவர்கள் பேரணியாக செல்லவுள்ளவுள்ளதுடன் அங்கு அவர்களது கூட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவ சமசமாஜக் கட்சியின் மே தின ஊர்வலம் பிற்பகல் 1.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பித்து கொம்பனி வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள பகுதி வரை பயணிக்கவுள்ளது. அங்கு அவர்களது மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதனைவிட ஊர்வலம் அற்ற கூட்டங்களை மட்டும் பல தொழிற் சங்கங்களும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ளன.

மேலும், இடதுசாரி அரசியல்வாதிகளான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோரின் கட்சிகளை உள்ளடக்கிய சோஷலிஷ மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் பிற்பகல் 3.00 மணிக்கு நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில், இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் மே தின கூட்டம் பிற்பகல் 3.00 மணிக்கு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இம்முறை இந்த தொழிற்சங்கமானது கட்சியுடன் இணையாமல் தனியாக தமது மே தினக் கூட்டத்தை நடாத்துவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சோஷலிஷ சம உரிமைகள் கட்சியின் மே தினக் கூட்டம் புதிய நகர மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கும், சுகாதார தொழிற் சங்கங்களின் ஒன்றியத்தின் மே தினக் கூட்டம் முற்பகல் 10.00 மணிக்கு ஜயவர்தனபுர மத்திய நிலையத்தில் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.