இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இலங்கைக்கு குறைவாகவே உள்ளதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாளை(16) கொல்கத்தாவில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், முரளிதரன் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது;
“…இலங்கை வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு பரவாயில்லை, ஆனால், குறைந்த ஓவர் போட்டிகளில் கடுமையாகத் திணறி வருகிறோம். இது கடினமான தொடர் எங்கள் வீரர்களின் திறமைக்கு கடும் சவாலாக அமையும். இந்தியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெல்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு மிகக் குறைவு. இந்தியாவில் அனைத்து அணிகளுமே திணறியுள்ளன.
கடந்த 13 ஆண்டுகளில் இரண்டு அணிகள் மட்டுமே இந்தியாவில் தொடரை வென்றுள்ளன. இந்திய அணி தற்போது தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ளது.
நான் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய சந்தர்ப்பங்களில் இந்திய அணியில் உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் விளையாடினார்கள். இப்போதை விட அப்போது இந்திய அணியின் துடுப்பாட்டம் வலுவாக இருந்தது.
சேவாக், கம்பீர், சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண், தோனி ஒன்றிலிருந்து 7 வரை நல்ல துடுப்பாட்ட வரிசை, இதில் பலர் சகல துறையிலும் சிறந்த வீரர்கள். இதனால் நாங்கள் கஷ்டப்பட்டோம்…” என்றும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
####