இம்ரானின் கட்சி 116 இடங்களில் வெற்றி…

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 25 ஆம் திகதிபாராளுமன்றத்தின் 272 தொகுதிகளுக்கும், 4 மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சுமார் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தல் முடிவுகளை நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. அதேவேளை, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 272 தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.