இம்ரான் கான் இராஜினாமா செய்ய வேண்டும் மீளவும் நவாஸ் ஷெரீப் பிரதமராக – மரியம் ஷெரீப் சவால்

(FASTNEWS | COLOMBO) – நீதித்துறையை மிரட்டி தனது தந்தைக்கு தண்டனை விதிக்க வைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இராஜினாமா செய்ய வேண்டும் என நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஊழல் வழக்கில் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிபதி மிரட்டப்பட்டதாக ஒரு ஆடியோ பதிவை நவாசின் மகள் மரியம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ தவறானது என சில அமைப்புகள் கூறி வருகின்றன. இருப்பினும் நீதித்துறை மீது இம்ரான் அரசும் இராணுவமும் ஆதிக்கம் செலுத்துகின்றன என அனைத்து கட்சிகளும் புகார் கூறி வருகின்ற நிலையில் மரியம் நவாஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மாண்டி பகுதீன் பகுதியில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் கூட்டத்தில் நவாசின் மகளும் கட்சியின் துணைத்தலைவருமான மரியம் உரையாற்றுகையில்;

” 69 வயதாகும் எனது தந்தை நவாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அருகில் இருப்பது கூட குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தண்டனை அறிவிக்கும் முன் நடந்த லீலைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.

நீதித்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. நவாஸ் வெளியே இருந்தால் ஆட்சிக்கு ஆபத்து என்பதால் இம்ரான் அஞ்சுகிறார். பாகிஸ்தானை ஆட்சி செய்வதற்கு இம்ரான்கானுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அவர் பதவி விலக வேண்டும். விரைவில் நவாஸ் வெளியே வருவார். முழு பலத்துடன் பாகிஸ்தானின் பிரதமராக மீண்டும் அவர் பதவியேற்பார். இவ்வாறு அவர் பேசினார். இம்ரானுக்கு சிக்கல் ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் பாகிஸ்தான் தவிக்கிறது. இதுவரை உதவி வந்த நாடுகள் கைவிட்டுவிட்டன.

சில வளைகுடா நாடுகள் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் சில உதவிகளை வழங்குகின்றன. ஆனால் பாகிஸ்தானின் பசிக்கு இவை சோளப்பொரியாக உள்ளன. எனவே பணக்காரர்களுக்கு தனி வரி அனைவரும் தமது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கெடுபிடிகளை இம்ரான் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது..” என தெரிவித்துள்ளார்.