இரட்டை ரயில் பாதைக்கு பச்சை சமிஞ்சை, பொதுமக்களுக்கு சிவப்பு சமிஞ்சை..

களனிவெளி ரயில் மார்க்கத்தில் கொழும்புக் கோட்டைக்கும் கொட்டாவைக்கும் இடைப்பட்ட பகுதியை இரட்டை ரயில் பாதைகளுடன் மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்து அமைச்சும், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சும் இணங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த இரட்டை ரயில் பாதையின் நிர்மாணத்துக்காக பாதையின் இருமருங்கிலும் வசிக்கும் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்படுமெனவும், அவர்களுக்கான மாற்று வசிப்பிடங்கள் பெற்றுத் தரப்படுமெனவும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், விசேடமாக ஹைலெவல் பாதை உட்பட அதனை அண்மித்த பெருந்தெருக்களில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவே இந்த இரட்டை ரயில் பாதைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அப்பாதைக்கான ஆரம்பப்பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.