இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு CID இல் முன்னிலையாகுமாறு உத்தரவு…

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு வழக்கின் இரண்டாவது தவணை இன்று(03) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இதன் அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்னும், சந்தேக நபர்கள் நால்வரும் எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 9.00 மணிக்கு சமூகமளித்து தங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் நீதவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சவூதிஅரேபிய நிதி உதவியின் கீழ் தனியார் பல்கலைக்கழகம் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதில் லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்த வேலைகளை அதன் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து இதன் கட்டுமானப் பணிகள் பிரிதொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த பிரதி அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோர் 100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.