இராணுவத்தின் கட்டளைத் தளபதி தொடர்பில் ஐ.நாவின் தீர்மானத்தினை வரவேற்கிறோம் – யஸ்மின் சூக்கா…

இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதி கலன அமுனுபுர தொடர்பில் ஐக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நாவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, சர்வதேச அமைதிப் படையில் அங்கம் வகிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் இது குறித்து தெரிவிக்கையில்;

“யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்றோ ஒருநாள் தீர்வு கிடைக்குமென்ற எண்ணம், இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியை திருப்பி அனுப்புவதற்கு ஐக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தின் ஊடாக ஏற்பட்டுள்ளது.

மேலும் யுத்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எவரும் ஐ.நா.வில் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது என்பதை இச்செயற்பாடு நிரூபித்துள்ளது.

அந்த வகையில் யுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்காலத்திலும் ஐ.நா.வின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது.

இதேவேளை, அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு இலங்கையின் இராணுவ அதிகாரி அமுனுபுர தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களே, ஐ.நா அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்” என அவ்வறிக்கையில் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.