இராணுவத்தில் சவுதி பெண்கள் இணைக்கத் தீர்மானம்…

சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இராணுவப் பணியில் விருப்பம் இருக்கும் பெண்களுக்கு மட்டுமானது என்பதுடன் இராணுவத்தில் பெண்கள் பணிபுரிவது கட்டாயமக்கப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) வெளியிட்டுள்ள செய்திகளின்படி, பொது பாதுகாப்பு இயக்குநரகம், இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அறிக்கையை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம், ஆஸிர், அல் பஹா மற்றும் ஷர்க்கியா ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரசின் ஷுரா கவுன்சிலின் ஒரு உறுப்பினரின் சார்பில் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்தின்படி, இராணுவப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் ஆண்டில் மூன்று மாதங்கள் கட்டாயம் பணிபுரியவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக கவுன்சிலிலும், சமூக ஊடகங்களிலும் வெவ்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.