இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைக்க குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் நேற்று(24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலை மிக அமைதியாகவும் நியாயமானதாகவும் நடத்தியமை குறித்தும் பிளேயர் ஜனாதிபதிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கி ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களையும் அவர் மெச்சியுள்ளார்.
இதனை தவிர, பிளேயர் மன்றத்தின் சர்வதேச வேலைத்திட்டங்களின் போது இலங்கையுடன் இணைந்து செயற்படுவது பற்றியும் பிளேயர், ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர், அதன் முன்னேற்றத்திற்கு வழங்கக் கூடிய அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
(riz)

