இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கையின் அரசதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும், 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் ஒரு அங்கமாக நடைபெற்ற, பிராந்திய கூட்டுறவில் தனியார்துறையின் பங்கு என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில் இந்தியப் பிரதிநிதி ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கபீர் காசிம்,
”இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் பாலத்தை அமைப்பதன் மூலம் வர்த்தகத்தை மேலும் விரிவாக்க முடியும்.
இரண்டு நாடுகளுக்கிடையிலும் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளன. இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கான திட்டம் தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் சார்பில் தகவல்கள் வெளியிடப்பட்ட போதும், அதுபற்றி இந்தியா தம்முடன் எந்தப் பேச்சுக்களும் நடத்தவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.