இலங்கைக்கு GSP பிளஸ் மார்ச்சில் கிடைக்கும் வாய்ப்பு – பிரதமர்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகையை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பெறக்கூடியதாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குறித்த காலக்கட்டத்துக்குள் இலங்கை அரசாங்கம் தமது பொருளாதார திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது ஐரோப்பிய விஜயத்தை முடித்துக்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைக்கையில்;

ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பில் தமது பயணத்தின்போது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த இந்தப் பிரச்சினையில் இன்னும் சில தொழில்நுட்ப விடயங்களை தீர்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு இலங்கை தமது ஆடை ஏற்றுமதியில் 87% அதிகரிப்பை கொண்டிருந்தது.

எனினும் பங்களாதேஷ், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பயன்படுத்தி தமது ஏற்றுமதியை 406% ஆக உயர்த்தியது.

இந்நிலையில் இலங்கை ஆடை ஏற்றுமதியை 300% ஆகஉயர்த்தினால், சர்வதேசத்திடம் கடன்படும் நாடாக இருக்காது என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பில் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளுடன் பேச்சுக்களை நடத்துவர் என்றும் பிரமதர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.