(FASTNEWS|COLOMBO) – இலங்கையில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் பங்களாதேஷ் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு என்பன அற்புதமாக உள்ளது என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் தமிம் இக்பால் பாராட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி குண்டுத் தாக்குதல் காரணமாக இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இலங்கை வருவதனை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்ததுடன், இலங்கையில் உள்ள பாதுகாப்பினை உறுதிப்படுத்தியிருந்ததை தொடர்ந்து, பங்களாதேஷ் அணி, இலங்கை வருவதாக அறிவித்தது.
அதன் அடிப்படையில், மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷ் அணியானது இலங்கை வந்துள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் தமிம் இக்பால் இலங்கையின் பாதுகாப்பினை பாராட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை எமக்கு வழங்கியுள்ள பாதுகாப்புக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பாதுகாப்பு மிக அற்புதமாக உள்ளது என தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் இங்கிருக்கும் சூழ்நிலையானது பங்களாதேஷ் வீரர்களுக்கு எவ்விதத்திலும் பாதகமாக இல்லை எனவும் வீரர்கள் ஹோட்டல் மற்றும் ஹோட்டலுக்கு வெளியில் செல்லும் போதும் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர் எனவும் தமிம் இக்பால் சுட்டிக்காட்டினார்.
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.