அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியதென அமெரிக்காவின் அரசியல் அமெரிக்காவின் அரசியல் அலுவல்களுக்கு பொறுப்பான செயலாளர் தோமஸ் ஏ ஷெனன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக உத்தியோகபூர்வமாக அமெரிக்க சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமெரிக்க அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனன் அவர்களுக்குமிடையிலான இந்த சந்திப்பு நேற்று (21) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான நீண்டகால உறவுகளை நினைவூட்டிய ஜனாதிபதி அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மூன்று தசாப்த போரின் பின்னர் நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கும் போர் இடம்பெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்காக அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பில் எவ்வித குறைபாடும் இடம்பெறாதென ஜனாதிபதிக்கு உறுதியளித்த உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஏ ஷெனன், எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கை விஜயத்தில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.