ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
“..நாட்டை பிரித்தாள முற்பட்ட விடுதலைப் புலிகளை தோற்கடித்து தற்போது நாடு சமாதானத்தை நோக்கி முன்னேறுகிறது. பொருளாதாரம், சமுகம் கைத்தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு அபிவிருத்தியை நோக்கி முன்னேறுகிறது.
அதேநேரம் மறுசீரமைப்பு செயற்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்களின் அமுலாக்கங்கள் தொடர்பில் இலங்கை அர்ப்பணிப்புடன் இருக்கிறது.
இந்த விடயங்களில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்..” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“..அதேநேரம், அடிப்படைவாதிகள் குறுங்காலத் தீர்வுகளையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் குறுங்காலத் தீர்வுகள் எப்போதும் வெற்றியளிக்காதன.
எனவே நிலையானதும், வெற்றிகரமானதுமான இலங்கையின் பயணத்துக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கட்டாயமானது..” என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
(rizmira)