இலங்கையிலுள்ள பியர் நிறுவனத்திற்கு அரசாங்கம் வரிச் சலுகை வழங்கியுள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் குறித்த பியர் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்திற்குள் வெள்ள நீர் புகுந்தமையினால், பியர் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பியர் விற்பனை செய்யப்படவில்லை.
இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பின்னணியில், பியர் உற்பத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது,எனினும், இந்த பியர் உற்பத்தி நிறுவனம் மீள ஆரம்பிக்கப்பட்டமை குறித்து தற்போது வியத்தகு செய்தியொன்று வெளியாகியுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பியர் நிறுவனத்திற்கு அரசாங்கம் சில மாதங்களுக்கு வரி சலுகை வழங்கியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள ஏனைய உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகை வழங்காத அரசாங்கம், பியர் நிறுவனத்திற்கு மாத்திரம் வரிச் சலுகை வழங்கியுள்ளது. அத்துடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி கூட முழுமையாக சென்றடையவில்லை.
எனினும், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பியர் நிறுவனத்திற்கு மாத்திரம் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சமந்தவிடம் வினவிய போது;
பியர் நிறுவனத்திற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளமை உண்மை எனவும், அது குறித்து தாமும் குரல் எழுப்ப தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் பியரிற்கான வரியையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
போதைப்பொருளுக்கு முற்றுப் புள்ளி என பிரசாரம் செய்து வரும் அரசாங்கமே, அதற்கான சலுகைகளையும் வழங்கி வருகின்றமை மிக வேதனைக்குறிய விடயம் என போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் குரல் எழுப்பும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன