பங்களாதேஷில் நடைபெற்றுவரும் ஆசியக்கிண்ண இருபதுக்கு 20 தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை இன்று எதிர்த்தாடுகின்றது. டாக்காவில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் மலிங்க தலைமையிலான இலங்கை அணி களமிறங்குகிறது.
இந்தப் போட்டி குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அணித் தலைவர் மலிங்க, கண்டிப்பாக இந்த தொடர் தனிப்பட்ட நபருக்கானது அல்ல. போட்டிகளின் போது எப்படி அனைவரும் செயற்படுகிறோம் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.
இந்திய தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை சற்று தடுமாற்றத்துடனேயே காணப்பட்டது. ஆனால் தற்போது புதிதாக ஒரு கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கிறோம்.
இலங்கை அணியில் பல இளம் வீரர்கள் இருப்பது பார்க்கவே சிறப்பாக உள்ளது. அது அணிக்கு புத்துணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், அவர்களின் அனுபவமும் அணிக்கு உதவியாக இருக்கும்.
அதேபோல் அணியில் உள்ள மூத்த வீரர்கள் அணிக்கு நல்ல நிலைமையை ஏற்படுத்தி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.