இலங்கை ஓர் இனத்திற்கு மட்டும் சொந்தமான நாடல்ல – அநுர

இலங்கை ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. அது பல்லின மக்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு பகிரங்கமாகக் கூறியவர் ஜே.வி.பி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.

கொழும்பில் நடைபெறும் கம்பன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜே.வி.பி என்ற அமைப்புத் தொடர்பில் தமிழ் மக்கள் கொண்ட கருத்தியல் வித்தியாசமானது. அந்த அமைப்பின் முன்னைய தலைவர்கள் ஜே.வி.பியை ஒரு பேரினவாத அமைப்பாகவே காட்டி வந்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் தமிழினத்துக்கு எதிராக கருத்துக் கூறுகின்ற -எதிராக செயற்படுகின்ற போக்கே ஜே.வி.பியிடம் இருந்துள்ளது.

ஆனால், அநுரகுமார திஸாநாயக்க அதன் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், அந்த அமைப்பிடம் நடுவுநிலை தன்மையும் பரந்த நோக்கும் இருப்பதை காணமுடிகிறது.

இலங்கை ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சொந்த மான நாடு என பாராளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பி யின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் தலைநகர் கொழும்பில் வைத்துக் கூறியுள்ளார் எனில் அது சாதாரணமான விடயமன்று.

இனவாதம் பேசக்கூடிய ஜே.வி.பி என்ற அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.

சிங்களவர்கள் என்றாலே அவர்கள் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்ற நினைப்பை விடுத்து சிங்களவர்களிலும் நியாயம் உரைக்க வல்லவர்கள் உள்ளனர்.

எனவே, அவர்களை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் அரசியல் தலைவர்கள் செய்தாக வேண்டும்.

பொதுவில் தமிழர்கள் தொடர்பில் சிங்களவர்களும்; சிங்களவர்கள் தொடர்பில் தமிழர்களும் எதிரான சிந்தனைப் போக்கை கொண்டுள்ளனர். இதற்கு அரசியல்வாதிகளும் இனவாத ஊடகங்களுமே காரணமாக உள்ளன.

இத்தகைய நிலைமையை உடைத்தெறிய வேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேற்கோள்காட்டி தெரிவித்திருந்தார்.