இலங்கை – கம்போடியாவுக்கு இடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

(FASTNEWS|COLOMBO) – இலங்கைக்கும் கம்போடிய அரசாங்கத்துக்கும் இடையிலான அரசியல் மற்றும் வர்த்தகத் துறையுடன் தொடர்புடைய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கம்போடியா நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கம்போடிய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போதே குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.

அரசியல் ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க கைச்சாத்திட்டதுடன், கம்போடியா சார்பாக கம்போடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கைச்சாத்திட்டார். இருநாடுகளுக்கிடையில் தேசிய கவுன்சில் ஒன்றை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு வர்த்தக சபைகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.

இதேவேளை, இரு நாடுகளுக்கிடையிலான நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் சிவில் விமான சேவைகள் தொடர்பிலான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டு சந்தை வாய்ப்புக்கள் மற்றும் நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், முதலீட்டு பாதுகாப்புக்காக சட்டபூர்வமான அடித்தளம் அமைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திய ஜனாதிபதி, எந்தவொரு நாடும் மற்றுமொரு நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாதென்பதே தனது வெளிநாட்டுக் கொள்கை என்பதையும் தெளிவுபடுத்தினார்.