உலகக் கிண்ண வெற்றியின் பின்னர் இலங்கை கிரிக்கெட்டில் அதிகமாக சூதாட்டக்காரர்கள் புகுந்து அணியை நாசம் செய்து விட்டார்கள் என முன்னாள் இலங்கை அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பெற்றௌலிய அமைச்சில் நேற்று(28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;
“ஒரு தேசம் என்று வந்துவிட்டால் ஜனநாயகம் இருக்கவேண்டும். ஆனால் இலங்கை கிரிக்கெட்டில் ஒருநாளும் ஜனநாயகம் இருந்ததில்லை. மாபியா ஒன்றுதான் எப்போதும் இருந்தது.
அக்காலத்தில் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எவரும் வரமாட்டார்கள். ஐந்து பேரைக்கூடத் தேட முடியாது. பணத்தைக் கண்டதும் பலர் புகுந்துவிட்டனர்.
தற்போதைய அணியின் நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 22ம் திகதி கடிதம் ஒன்றைக் கையளித்தேன், அதன் பிரதி ஒன்றை பிரதமருக்கும் வழங்கினேன், மேலும் ஊடகங்களுக்கும் பிரதிகளை வழங்குவதாக இருவரிடமும் தெரிவித்தேன்.
நான் சொல்லும் விடயங்களுக்கு செவிமடுக்க வேண்டியவர்கள் மௌனமாக இருப்பதாலேயே கடைசியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற எனது கடமையின் அடிப்படையில் இந்த கடிதத்தை நான் ஒப்படைத்தேன்’’ என்றார்.
(rizmira)