இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி நிர்வாகத்தை கையாள ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான புதிய நிர்வாக குழு நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றது. இந்நிகழ்விற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய நிர்வாகக் குழுவினர் நேற்றைய தினமே ஒரு சில தீர்மானங்களையும் எடுத்துள்ளனர். இதன்போது தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் செயற்பட தலைவர் திலங்க சுமதிபாலவும் பிரதித் தலைவர் ஜயந்த தர்மதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆசிய கிரிக்கெட் சங்கத்துடன் செயற்பட திலங்க சுமதிபாலவும் மொஹான் சமரநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு நிதி நிர்வாகத்தைக் கையாள ஐந்து பேர்கொண்ட குழுவொன்று அமைக்கப்படுகிறது. அதில் ஒருவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், ஒருவரை விளையாட்டுத்துறை அமைச்சும், ஒருவரை நிதி அமைச்சும், இன்னொருவரை இலங்கை கணக்கியல் நிறுவனமும், ஐந்தாமவரை இலங்கையிலுள்ள அனைத்து கிரிக்கெட் கழகங்களும் சேர்ந்து நியமிக்கும்.
இந்தத் தீர்மானங்கள் அனைத்தையும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். அவரும் இதற்கு அனுமதியளித்துள்ளதாக திலங்க சுமதிபால மேலும் தெரிவித்தார்.