இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை விரைவில் ஏற்படுத்துவது தொடர்பில் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் அப்ரிரடி தந்தரபோன் (Apriradi Tantraporn) ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இம்மாதம் 25ம் திகதி முதல் 27ம் திகதி வரை தாய்லாந்து சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அந்நாட்டு வர்த்தக அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பெங்கொக் நகரில் உள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தாய்லாந்து நாட்டின் கைத்தொழில் அமைச்சர் அட்சகா சிபுன்ரொங் (Atchaka Sibunruang), அந்நாட்டு முதலீட்டு சபையின் பொது செயலாளர் ஹிருன்யா சுசினாய் (Hirunya Suchinai) மற்றும் கைத்தொழில், வர்த்தக மற்றும் வங்கிகளின் கூட்டுக் குழு (JSCCIB) உறுப்பினர்களையும் சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போது சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்காக இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நட்பு ரீதியான வணிக திட்டங்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் 40 வர்த்தக வலயங்களை உருவாக்க இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சரின் இந்த சந்திப்பின் போது மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.