இலங்கை போக்குவரத்து மற்றும் ரயில் சபைகளது ஏழு தொழிற்சங்கங்கள் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

அரசாங்க, தனியார் பஸ் சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் மற்றும் புகையிரத திணைக்கள தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டம் நடத்த உள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் ஓய்வு பெற்றுக் கொள்வது குறித்த சுற்று நிருபத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து பாரிய போராட்டம் நடத்தப்படும் என இ.போ.சவை பாதுகாப்போம் என்ற கூட்டு தொழிற்சங்கங்களின் பிரதான செயலாளர் சேபால லியனகே ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் …

இலங்கை போக்குவரத்துச் சபை மறுசீரமைப்பு, புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்தில் தனியார் பஸ்களுக்கு இடமளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஒன்றை வழங்காவிட்டால் இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏழு தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, புகையிரத திணைக்கள ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவசர தேவையாகக் கருதி இந்த சுற்று நிருபத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை புகையிரத ஊழியர்கள் சங்கம், பிரதமரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர்.

மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.