இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடிக்கு எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படையணி..

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பங்கேற்க இன்று(11) இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு களும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பாதுகாப்பானது, இந்தியாவில் இந்திய பிரதமருக்கு பாதுகாப்பளிக்கும் எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தேவையான எஸ்.பி.ஜி. சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தலைமையில் குழுவொன்று ஏற்கனவே இலங்கை வந்து கொழும்பு மற்றும் அட்டன் பகுதிகளின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்துள்ளதுடன் இன்று பிரதமர் மோடியுடன் இலங்கை வரும் அவரது மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நேரடி பாதுகாப்புக்கு மேலதிகமாக கொழும்பு மற்றும் அட்டன் பகுதிகளில் மோடி பங்கேற்கும் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் இரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கீழ் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விஷேட நிலைமைகள் மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பிலான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளை தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் ஆகியோரின் மேற்பார்வை, ஆலோசனைக்கு அமைவாக சுமார் 6000 பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)