(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை கிரிக்கெட் குழாம், பாகிஸ்தானை சென்றடைந்தது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளன.
கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களில் இலங்கை அணி வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் லஹிரு திரிமான்னே
பலம் பொருந்திய அணியொன்று எமக்கு கிடைத்துள்ளது. இளம் வீரர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். எம்மால் சிறந்த போட்டியொன்றை வழங்கி வெற்றியீட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சிரேஷ்ட வீரர்களின் தனிப்பட்ட முடிவுகளுக்கு தலைவணங்கி, தற்போதுள்ள அணியைக் கொண்டு எவ்வாறு வெற்றியீட்டுவது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இந்தத் தொடர் இளம் வீரர்களுக்கு மிகப்பெரியதொரு சந்தர்ப்பமாகும். இவ்வாறானதொரு சந்தர்ப்பம் இலகுவில் கிடைக்காது.
எனவே திறமையை வெளிப்படுத்தி தம்மை நிரூபிப்பதற்கான சிறந்த வாய்ப்பே இந்த தொடராகும் என இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானுடன் விளையாட சிறந்த முறையில் தயாராகியுள்ளோம். 4 வீரர்கள் மாத்திரமே இருபதுக்கு 20 தொடரிலிருந்து விலகியுள்ளனர் என இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 அரங்கை பொருத்தவரையில், பாகிஸ்தான் முதற்தர அணி. எமது அணியில் இளம் வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தியவர்கள். இந்தத் தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
குறிப்பாக மீனோத் பானுக்க, பானுக்க ராஜபக்ஷ உள்ளிட்ட வீரர்கள் தேசியமட்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தவர்கள். ஏற்கனவே நான் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளேன். அவர்களிடம் சிறந்த பாதுகாப்புத் திட்டம் இருக்கின்றது என இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் தசுன் சானக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதியும் இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 5ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.