இஸ்லாமிய நிலப் பகுதிகள் அனைத்திலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை… [VIDEO]

அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் தமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை தாம் உறங்கப் போவதில்லை என ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் புதிய காணொளிக் காட்சியொன்றில் தோன்றி சூளுரைத்துள்ளான்.

சலாதீன் என்ற அந்த சிறுவன், நபரொருவரை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்னர் தான் எவ்வாறு மேற்படி தீவிரவாதக் குழுவில் இணைந்து கொண்டான் என்பதை விபரிக்கிறான்.

நன்றாகப் படிக்கும் பட்சத்தில் தன்னை விடுமுறையின் போது (ஐ.எஸ்.தீவிரவாதிகளின்) இராணுவ முகாமொன்றுக்கு அழைத்துச் செல்வதாக தனது தந்தை தனக்கு வாக்குறுதியளித்திருந்ததாக அந்த சிறுவன் கூறுகிறான்.

‘ஐ.எஸ். தீவிரவாதிகளால் இன்னொரு குழந்தை பிரசவிப்பு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளிக் காட்சியின் ஆரம்பத்தில் அந்த சிறுவன் சிறிய தோட்டமொன்றைப் பராமரித்து அங்குள்ள தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை வெளிப்படுத்தும் காட்சி காண்பிக்கப்படுகிறது.

தனது தந்தை மோதல் ஒன்றில் இறப்பதற்கு இரு மணித்தியாலங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட இராணுவ முகாமுக்கு தன்னை அழைத்து வந்து, ‘நீ இவ்வாறு தாவரங்களை நட்டு பராமரித்த பின்னர் பொறுமையாக இருக்க வேண்டும். அதேசமயம் மத சட்டத்தைக் கற்று கடவுளுக்கு பயபக்தியாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்ததாக சலாதீன் கூறினான்.