பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகள் இன்று(04) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகத் திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வட மாகாண சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது.
ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்த பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வடமாகாண தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் இது வரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வடமாகாண முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்த போதிலும் தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.
இதனால் வேறு வழியின்றி வடபிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வடமாகாண முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.